Sunday, May 21, 2006

நாயகன் ஒரு நங்கை

இது தான் என் புது கதையின் பெயர்.
நான் எழுதியதில் இது தான் சிறந்ததா என்று எனக்குத் தெரியாது, ஆனால் இது தான் நான் மிகவும் சிரமப்பட்டு எழுதியது.

உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

PDF வடிவத்தில் என் இணைப் பக்கத்தில் ஏற்றியுள்ளேன்.

www.shankarnarayan.co.nr

படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன் ... !!

நாயகன் ஒரு நங்கை

இது தான் என் புது கதையின் பெயர்.
நான் எழுதியதில் இது தான் சிறந்ததா என்று எனக்குத் தெரியாது, ஆனால் இது தான் நான் மிகவும் சிரமப்பட்டு எழுதியது.

உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

www.shankarnarayan.co.nr

Friday, March 31, 2006

அன்பே நீயின்றி

எங்கள் திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்க்கு முன்னமே மிக்வும் நெருக்கமாகவே பழகுவோம், அத்துமீறல்களுடன் ! எங்கள் காதலை எதிர்ப்பார் இல்லை. இருவரும் நல்ல வேலையில் இருந்தோம்.வேலையை அவள் ராஜினாமா செய்ய முன் வந்த போது கூட நான், "இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்." "ஆனா குழந்தை பிறந்தா பண்ணிடுவேன்" என்றாள். "உன் இஷ்டம்" என்றேன். என் நண்பன் ஒருவன் எங்கள் காதல்-கலியாணத்தில் மிகவும் ஈடுபாடுடன் இருந்தான். ரொம்பவே வேதாந்தம் பேசுவான். திருமணதினத்தன்று சொன்னான். எங்கேயோ வேறாரோ சொல்லி கேட்ட மாதிரி இருந்தது... "காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்களை மறந்தீங்க. காதலிக்கும் போது தன்னையே மறந்தீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் காதலை மறக்காதீங்க..."


திருமணமத்திற்க்கு முன் அப்படி இருந்த நாங்கள், அதற்கு பிறகு ஒரு நாள் கூட சண்டையிடாமல் இருந்ததில்லை. தேன் நிலவின் போதே சிக்கல் தான். அவள் ஒன்று சொல்ல நான் ஒன்று சொல்ல.. அப்பப்பா !! அது நடந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன !!

வழக்கமாக இருவரும் ஆறு மணிக்கு வீட்டுக்கு வருவோம். குறைந்த பட்சம் ஏழு மணிக்காவது சண்டை ஆரம்பிக்கும். சில சமயங்களில் அவள் என் கன்னங்களில் ஐந்து விரல்கள் பதிய அறைவாள் (பெண்களுக்கு இயற்கையில் பலம் குறைவு என படித்துள்ளேன் -- முற்றிலும் பொய்). நான் அவள் கையை முறிப்பேன். வீல் என்று கதறுவாள். என் செவிகளுக்கு இனிமையாக இருக்கும். சில தினங்கள் இரவு நேரமாகிவிட்டால், இருவரும் நன்கு உறங்கிவிட்டு மறுநாள் தொடருவோம்.

காலையில் நான் விழித்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தேன். அவள் இதழ்களில் முத்தமிட்டேன். நான் பின்வாங்க, அவள் இதழ்கள் என் உதடுகளை நெருங்க, சிறு புன்முறுவலுடன் விலகினேன். "ஹும்" என்று குப்புறத்திக்கொண்டாள்.

இன்று அவள் அலுவலக வேலையாக பாஸ்டன் செல்கிறாள். மூன்று நாட்கள் கழித்து திரும்புவாள். என்னவெல்லாமோ வாங்க வேண்டுமாம். அதனால் இன்று மட்டம் போட்டு விட்டாள். நான் உடன் வரட்டுமா என கேட்கப்போய்த்தான் நேற்றைய சண்டை !!

அவளை எழுப்பாமல், அவளுக்கும் சேர்த்து சமைத்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். ஐந்து மணிக்கு திரும்பினபோது அவள் வீட்டில் இல்லை. பத்து மணிக்கு ஃப்லைட். எங்கே சென்றிருப்பாள் ?? ஒரு வேளை... !!

"ஹலோ"
மிகவும் பணிவான பதில், "சொல்லுங்க சார்!"
"அங்க இருக்காளா?"
"ஆமாம் சார். பேசறீங்களா ?"
"வேணாம்.. எப்ப வருவான்னு கேட்டு...??"
"மூணு மணிக்கே வந்துட்டா. என்னல்லாமோ வாங்கியந்தா...இப்ப கிளம்பிடுவான்னு நினைக்கறேன்.."

துண்டித்துவிட்டேன். எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் அங்கு செல்ல வேண்டாம் என்று !!

டங் டங் டங் டங் டங்...
அடுத்த டங்கிற்க்கு முன் வந்துவிட்டாள். நான் ஏதும் பேசவில்லை.

"வந்துட்டியா.. ஆறு மணி ஆகலையே !!"
" "

ஏதோ வேலை பார்த்துக்கொண்டே பேசினாள்.
"காபி போட்டு இருக்கலாம்ல !!"
" "
"ஐயோ.. வேணாம்.. காலைல சாப்பாட்டை சொதப்பின மாதிரி பண்ணிடுவ !! நானே போடறேன்"
" "
"பேசமாட்டீங்களோ... நேத்தி கோபம் தீராமத்தான் இன்னிக்கு காலைல..."

அவள் முடிப்பதற்க்குள் நிமிர்ந்தேன். கண்கள் சந்தித்தன... ஏதோ மகாராணிக்கேற்றால் போல் நின்றுகொண்டிருந்தாள்.

"எங்க போன ?"
" " அங்கே மெளனம்.
"ம்..??"
"ஷாப்பிங் போயிட்டு சரவணனை பார்த்துட்டு வரேன்"
"எங்க போன?"
" "
"அறிவு இல்லை.. அங்க போகாதேன்னா !! அவனை இங்க வர சொல்லேன். ல்ல வேறெங்கேயாவது போய் பேசுங்களேன். ஹோட்டல்ல ரூம் போட்டு வேணாலும் பேசுங்களேன்.."
"அவனை அங்க பார்க்கறது தான் சேஃப்"
"எனக்கு பயமா இருக்கே!"

பேச்சு வளர்ந்துகொண்டே செல்ல..எப்படியோ தன் கைகளை என் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு .... !!
"சரவணன் ஏர்போர்ட் வருவான். நீ வேணாம்"

நான் செல்லவில்லை. அவன் பார்த்துக்கொள்ளட்டும். பார்த்துக்கொள்வான் - நான் அறிவேன். சென்றுவிட்டாள். அப்பாடா !!
ஏதோ கான்ஃபரன்சாம்... ஒழியட்டும்... மூன்று நாட்கள் அமைதியாக இருப்பேன். டிவியில் அக்னி நட்சத்திரம் திரைப்படம்.

காலையில் வடித்ததை சாப்பிட்டேன். நான் நன்றாகவே சமைப்பேன். இருந்தும் அவளைப்போல் வருமா ??!!
சாப்பிட்டு படுக்க சென்றேன். தூக்கம் வரவில்லை. புத்தகத்தை எடுத்தால் படிக்க இயலவில்லை.விளக்கை பார்த்துகோண்டே இருந்தேன் நான்கு மணி வரை. பிறகு நினைவிழந்தேன் !!

காலையில் அலுவலகம் செல்லவில்லை. உதட்டில் பேண்ட்-எய்ட், கட்டிலில் மோதிக்கொண்டதன் விளைவாக சின்ன ரத்தக்காயம். சமைத்த முயற்சியில் சாதம் குழைந்துவிட்டது. அதையே சாப்பிட்டேன். வீட்டில் இருந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதா - இருப்பு கொள்ளவில்லை. முதலில் சாய்ந்தரம் வெளியே சென்று விடலாம் என நினைத்தேன், ஆனால் செல்லவில்லை - தனியாக எங்கே செல்வது !! பைத்தியம் பிடிப்பதுபோல் ஆகிவிட்டது. இரவு என்னமோ தின்றுவிட்டு படுத்துவிட்டேன். முதள் நாள் தூங்காததன் விளைவாக இன்று என்னை அறியாமலேயே தூங்கிவிட்டேன்.

அன்று செய்த பிழையை மறுதினம் செய்யவில்லை. உதடு பிழைத்துக்கொண்டது. இரண்டு வருட பழக்கம்... திடீரென்று ஒரு நாள் மாற்றச்சொன்னால்... !!

எழுந்தவுடன் அழைப்பு, என் அலுவலகத்திலிருந்து - நான் இல்லை என்றால் ஒன்றும் நடக்காது போலும் !! அங்கும் வழக்கம் போல் கவனம் செலுத்த முடியவில்லை.

"ஏன் சார் ஒரு மாதிரி இருக்கீங்க" என் மற்றவர் கேட்க, "எது மாதிரி ?" என்றே பதில் சொன்னேன். உண்மை தான். மற்ற தினங்களுக்கும் அன்றைக்கும் என்ன பெரிய வித்தியாசம் !! ஒரு வேளை .. ச்சீ இருக்காது !! ஐந்து மணிக்கு என் வண்டியில் ஏறி அவள் அலுவலகத்திற்க்கு சென்றுவிட்டேன் - அப்போது தான் உணர்ந்தேன் , இரண்டு நாட்களாக என்னிடம் என்ன சிக்கல் என்று !


வீட்டிற்க்கு சென்று தனியே பேச ஆரம்பித்தேன் - யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று சொல்லியிருப்பார்கள். அவள் என்ன செய்துகொண்டிருப்பாள் ? இன்று தான் அவளுக்கு கான்ஃபரன்ஸ். இந்நேரம் அங்கு தான் இருப்பாள். தற்பொழுது வரை ஃபோன் இல்லை. தொலைபேசி அருகிலெயே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். ம்ஹும். அவள் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் பாஸ்டனில் அவளுடன் தொடர்பு கொள்ள முடியுமோ ?!!

சாப்பிடாமல் அங்கேயே கண்ணயர்ந்தேன். மீண்டும் மறுநாள் மட்டம். உறக்கமின்மை, மனோளைச்சல், ஏனென்றறியாத வேதனை - ஒரு நாளும் இந்த அனுபவம் ஏற்பட்டதில்லை. ஒரு நாளும் அவளை விட்டு பிரிந்ததில்லையோ ?? ஆமாம். தினமும் சண்டை, அடிதடி, ஆனால் ஒரு நாள் கூட தூங்காமல் இருந்ததில்லை. ஒரு நாள் கூட மன வருத்தம் இருந்ததில்லை. தன் நிலை அறியாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. இன்று தலைகீழ். அவள் இல்லாமல் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. அவளை பார்க்காத விழிகள் இயங்கவில்லை. "சனியனே" என்று அவளை திட்டாத உதடுகளுக்கு இன்று என்ன பேசுகிறொம் என தெரியவில்லை. ஆவளின்றி ஓர் அணுவும் அசையவில்லை.

மதியம் சுமார் நான்கு மணிக்கு வெளியே சென்று, ஆட்டோவிடம், "காசிமேடு" என்றேன். அவளை போகாதே என்று சொன்ன இடத்தில் இன்று நான். ஏற்கனவே ஒரு முறை அங்கு சென்றுள்ளேன். ஞாபகம் உள்ளது.

அந்த தெருவினுள் நுழைந்ததும் இருவர் என்னை நோக்கி விரைந்து, "ஆரு பா நீ ?? இன்னா வேணும் ??
நான் பதில் சொல்வதற்க்குள் இன்னொருவன் வேகமாக வந்தான், "முண்டங்களா ... இது நம்ம நிவேதா ஹஸ்பண்ட் டா... நீ வா சார் !! என்ன மனசுல வச்சுறுக்கியா... உன் கல்யாணத்துக்கு வந்தோமுல்ல !!"
"சரவணன்" என்றேன் மெதுவாக !! அங்கு அந்த பெயருக்கு தனி மரியாதை.
"உள்ளே இருக்காரு சார். இப்போல்லாம் பகல்லயே புல் டைட்... கொஞ்ச நாளா ரொம்ப மாறிட்டாரு !!"

சின்ன வீடு அது. நுழையும் போதே உளறல்... "நீ அழகாதாண்டீ கீற!! நான் எப்படி உன்கிட்ட சொல்லுவேன் !! இது புரியாம தினம் என்ன ..."

அவன் மட்டும் தான் இருந்தான். பார்வை என் மீது பட்டதும், "வா... வாங்க சார் !! எப்படி ...?"
குப்பென்று நாற்றம். "நல்லாருக்கேன்... பகல்லயே இப்படியா !!"

"ஐயோ.. நிவேதா சொல்லி சொல்லி. நல்லா கொறைச்சுருந்தேன் சார்!! இப்பதான் ஒரு மாசமா திருப்பி... தேவின்னு ஒரு பொண்ணு சார்... ரொம்ப அழகா இருப்பா.." என்று ஏதோ உளறிக்கொண்டே இருந்தான்.

"நிவேதா நிறைய சொல்லி இருக்கு சார். கல்யாண வாழ்க்கை ஜோராம். உங்களை பார்க்காம அதால இருக்க முடியாதாம். . நீங்க அது இல்லாம சரியா சாப்பிட கூட மாட்டீங்களாம். மூணு நாள் எப்படி பிரிஞ்சு இருக்க முடியும்னு தெரியலயாம். பிரியமுடியாதுன்னுதான் உங்களை ஏர்போர்ட் வரவேண்டாம்னு சொல்லிச்சாம்.ஆனா அங்கையும் ஒரே அழுகை.""

நான் பேச முயற்சிக்க, என்னை அவன் விடவில்லை. உளறல் தொடர்ந்தது.

"எனக்கும் ஆசை தான் சார். கல்யாணம் பண்ணிக்கனும்னு... தேவதை மாதிரி இருப்பா சார் தேவி.. ஆனா நம்ம தொழிலுக்கு ஒத்து வராது !!"
"நிவேதா ஃபோன் ?"
"பேசிச்சு சார். மீட்டிங்கு முன்னாடியே. முடிஞ்சதும் கிளம்பிடுமாம். உங்ககிட்ட பேசினால், மீட்டிங்ல பேச வேண்டியத மறந்துருமாம். ஏதோ முக்கியமான சமாச்சாரம் உண்டாம். உங்க கைல தான் சொல்லுமாம்."


சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு திரும்பினேன்.
கிளம்புவதற்க்கு முன் அவனிடம் சொல்லிவிட்டேன், "ஒண்ணும் ஒடலை எனக்கு!!"
"நீ நாளைக்கு ஆஃபீஸ் போ வாத்தியாரே. திரும்போது வூட்ல இருக்கும்"

ஆட்டோவில் வரும் போது ஏதோ சிந்தனைகள். என்னிடம் பேசவில்லை... அவனிடம் .. ??!!
அவர்கள் உறவைப்பற்றி வாரம் ஒரு முறையாவது அவள் புலம்புவாள். முதன் முறை சொன்னபோது கண்ணீர் வந்தது உண்மை தான். ஆனால், மீண்டும் மீண்டும் கேட்டால், சிரிப்பு தான் வரும். வந்தவுடம் சொல்லுவாள், "சரவணன் எவ்வளோ நல்லா ஆறுதல் சொன்னான் தெரியுமா !! இருபது வருசம் டா !! மறக்க முடியலை... பதினஞ்சு வயசுல ஒரு பொண்ணுக்கும் நடக்கக்கூடாதது எனக்கு நடந்து... என்ன காப்பாத்தி... அவன் கொடுத்த உயிர் டா இது !!"


வரட்டும்... மறுநாள் அலுவலகம் சென்றேன், திரும்பும் போழுது வீட்டில் இருப்பாள் என்ற அந்த நம்பிக்கையுடன் !!

பர பர என வேலையை முடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்தேன். சோஃபாவில் தூங்கிக்கொண்டிருந்தாள். மேஜையில் எனக்காக காபி. அவள் படுத்திருந்த அழகை ரசிக்காமல் எப்படி இருப்பது !! அவள் புடவை மெல்ல அசைந்து அந்த வளைவுகளை... என் கண்களை கெடுக்கும் அந்த வளைவுகளை ஆயிரமாவது முறையாக எனக்கு அறிமுகப்படுத்த .... வாழ்க மின்விசிறி !! ...

காபி குடித்து வைத்த சத்தத்தில், "மூணு நாள் உறுப்படியா கொட்டிக்கமாட்டியா!! அரிசி பேருக்குக்கூட கொறையல !!"
"எல்லாம் தின்னோம் ... போன் பண்ண என்ன உனக்கு.. போய் சேர்ந்தவொடனே ??"
"நீ பேச வேண்டியது தானே.. ஆஃபீஸ்ல கேட்டா நம்பர் தரா !!"
"சனியனே !! நீ தான் மீட்டிங் போயிருக்க.. நான் பேசி உன் மீட்டிங்..."

அவ்வளவு தான்... ஆரம்பித்துவிட்டது !!

எல்லாம் சொன்னேன். சரவணனை பார்த்தது. அவள் தொலைபேசியில் பேசியது அவன் என்னிடம் சொன்னது... எல்லாம் !! வழக்கம் போல் சண்டை வளர்ந்தது !!
இரவு அவள் சமைத்ததை சாப்பிட்டோம் - தேவாமிர்தம்.
நான் படுக்க சென்றேன். பக்கத்து அறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். அவள் படுத்தபின் நான் படுப்பது தான் வழக்கம்.

"அதென்ன முக்கியமான் விஷயம். என் கிட்ட தான் சொல்லுவியாமே !!"
"அதான் படுத்தாச்சுல்ல.. தூங்கு !!"

முகத்தை திருப்பிக்கொண்டேன். அவளும் வந்து படுத்துக்கொண்டாள். சட்டென்று எழுந்தேன். முறைத்தாள். வெளியே சென்று என்ன எழுதினாள் என பார்த்தேன் - ராஜினாமா கடிதம். திரும்பினேன். தூங்குவது போல் பாசங்கு !! படுத்துக்கொண்டு அவள் இதழ்களில் முத்தமிட்டேன். நான் பின்வாங்க, அவள் என்னை நெருங்க, நான் விலக கண்களை திறந்தாள். உதட்டை இப்படியும் அப்படியும் கோணிக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டாள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவள் வயிற்றில் என் கையைப்போட்டு இடையோடு இழுத்து என் பக்கம் திருப்பி, "என்ன விஷயம் அது ?"

"போடா.. வெண்ணை !!" என்றாள்.

அன்றிவு நன்கு உறங்கினேன் !!



நரேன்

Saturday, November 19, 2005

தமிழில் பாட...

ஒரு சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.
என்னை பாட சொன்னார்கள் .கொஞ்சம் சுமாராகவே பாடுவென்.

"இயலிசையில் உசித வஞ்சிக்கயர்வாகி..." என்று திருப்புகழ் பாடினேன்...

"இது தமிழோ" என்று என்னை கேட்கும் வகையில், எல்லோரும் பே என்று பார்த்தார்கள்.

பாட்டின் முதன் வரியின் பொழுது மட்டும், என் கண் அவள் மேல் பட்டதால், அந்த பெண் மட்டும் தலையை குனிந்து கொண்டாள்.


அவளுக்கு மட்டும் நான் பாடியது புரிந்ததோ அல்லது அவளை பார்த்து தான் நான் பாடினேனா ??

எப்படியோ, இயலிசையில் உசித அவ்வஞ்சிக்கயர்வாகி இதை எழுதி முடித்துவிட்டேன்.